Tuesday, February 19, 2008

முஷாரப் கட்சி படுதோல்வி: ஷெரீப்-பெனாசிர் கட்சிகள் முன்னணி

பாகிஸ்தானில் நேற்று நடந்த நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மறும் பெனாசிர் கட்சிகள் முன்னணியில் உள்ளன. முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஆனால், யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரிகிறது.

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நேற்று நாடாளுமன்றத்திற்கும், மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் கண்காணிப்பில் கீழ் நடந்த இந்தத் தேர்தலில் முக்கால்வாசி வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை. 35 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வாக்குப் பதிவுக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தொடக்கத்திலிருந்தே நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி முன்னணி பெற்றது. 2வது இடத்தை பெனாசிர் பூட்டவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றுள்ளது. முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

மொத்தம் உள்ள 324 எம்.பி. தொகுதிகளில் இதுவரை 128 இடங்களுக்கான முடிவுகள் தெரிய வந்துள்ளன. அதில் நவாஸ் கட்சிக்கு 45 இடங்கள் கிடைத்துள்ளன. பெனாசிர் கட்சி 38 இடங்களைப் பிடித்துள்ளது. முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சிக்கு 18 இடங்களே கிடைத்தன. மற்றவர்கள் 27 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

முஷாரப் ஆதரவு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் சுஜாத் உசேன் முன்னாள் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத், முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரி உள்ளிட்ட பல தலைவர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர்.

நவாஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், பெனாசிர் கட்சியும் பெருவாரியான வெற்றியைக் குவிக்கும் எனத் தெரிகிறது. மூன்றில் இரண்டு பங்கு இடங்களை இந்தக் கட்சிகள் கைப்பற்றும் எனவும் தெரிகிறது.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments: